இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவன், இடது கண்ணில் அடிக்கடி நீர் வந்து கொண்டிருந்ததால், அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர், கண்ணில் மெல்லிய பிளாஸ்டிக் பொருள் இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம் என்றும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, நவம்பர் 12ஆம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை கண்டு, பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், மருத்துவரின் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார், இது குறித்து தீவிர விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.