தேசிய பறவை, தேசிய விலங்கு போல தேசிய மீசையாக தமிழ்நாட்டு ஸ்டைல் அருவா மீசையை அறிவிக்க வேண்டுமென காங்கிரஸ் மக்களவையில் பேசியுள்ளது. அது ஏன் அருவா மீசை? என்பதற்கு பதில் இதோ…
புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தந்த சமயத்தில் உலகம் முழுவது பிரபலமானவர் இராணுவ விமானி அபிநந்தன். பாகிஸ்தான் விமானக்களை விரட்டியடித்த அபிநந்தன் விமான கோளாறு காரணமாக பாகிஸ்தானில் இறங்கினார். பாகிஸ்தான் அவரை சிறையிலடைத்து விசாரணை செய்தது. அதற்கு அவர் அஞ்சாமல் பதில் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தியா முழுவதும் அபிநந்தனுக்கு ரசிகர்கள் உருவானார்கள். அவருடைய அருவா மீசையும் பிரபலம் ஆனது. பலபேர் அவருடைய அருவா மீசை போலவே மீசை வளர்க்க ஆரம்பித்தனர்.
மறுநாளே விடுவிக்கப்பட்ட அபிநந்தன் தற்போது விமானப்படையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அபிநந்தனுக்கு விருது வழங்க வேண்டுமென்றும் அவரது அருவா மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டுமென்றும் மக்களவையில் காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் இந்த வேண்டுகோள் கொண்டாடபட்டாலும் மற்றொரு பக்கம் பாஜக போலவே காங்கிரஸும் தேசபக்தியை தூக்கிப்பிடிக்கும் யுக்தியை கடைப்பிடிக்க முயற்சி செய்கிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அபிநந்தன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் அவருடைய அருவா மீசை தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் பிரபலமான மீசை என்பதும் குறிப்பிடத்தக்கது.