நாக்பூரில் வங்கி அதிகாரி போல பேசி செயலி மூலமாக மர்ம கும்பல் 9 லட்சம் ரூபாயை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள அதேசமயம் ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. நாக்பூர் கொரடி பகுதியில் வசித்து வருபவர் அசோக் மென்வாட். இவரது செல்போனை இவரது 15 வயது மகன் உபயோகித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் தன்னை வங்கி அதிகாரி என்று சொல்லி பேசிய மர்ம நபர் பண பரிவர்த்தனைக்காக செல்போனில் தான் சொல்லும் செயலியை பதிவிறக்க வேண்டுமென கூறியுள்ளார். சிறுவனும் குறிப்பிட்ட செயலியை மொபைலில் பதிவேற்றி அதற்கு கேட்கப்பட்ட ஓடிபி எண்ணையும் அளித்துள்ளார். பிறகு சில நிமிடங்களில் அசோக் வங்கி கணக்கில் இருந்த 9 லட்ச ரூபாயும் மாயமானது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.