பெங்களூருவில் சொந்த தந்தையே தன் பையனை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் வுபுதிபுரா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் சிட்பண்ட் கம்பெனி நடத்தி வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சமீபகாலமாக தனது கம்பெனியில் ஏற்பட்ட நஷ்டங்களால் மிகவும் கடன்சுமைக்கு உட்பட்ட சுரேஷ் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். மனைவி கீதா முதலில் தூக்கு போட்டு இறந்த பிறகு, தனது மகனை அழைத்திருக்கிறார். அவனை ஒரு ஸ்டூல் மேல் நிற்க வைத்து கழுத்தில் துணியை கட்டி உத்திரத்தில் கட்டிவிட்டிருக்கிறார். அப்பா ஏன் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என புரியாமல் நின்று கொண்டிருந்திருக்கிறான் சிறுவன். திடீரென ஸ்டூலை தட்டிவிடவும் தொங்கிய சிறுவன் துடிக்க துடிக்க உயிரிழந்திருக்கிறான்.
தனது தம்பியின் சாவை செல்போனில் படம்பிடித்தபடி மறைந்து கொண்டிருந்திருக்கிறார் சுரேஷின் மகள். அதற்குள் விபரமறிந்து போலீஸ் அங்கு வந்துவிட சுரேஷையும் அவரது மகளையும் விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சுரேஷ் “என் மனைவிதான் மகனையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டாள்” என்று கூறியுள்ளார். தான் எடுத்த வீடியோவை போலீஸாரிடம் கொடுத்து உண்மையில் என்ன நடந்தது என்பதை சொல்லிவிட்டார் சுரேஷின் மகள். தொடர்ந்து தன்னையும் அவர் கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் சுரேஷை கைது செய்த சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையே தன் மகனை,மனைவியை கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.