ஒருபக்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று கருப்புதினமாக அனுசரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பாஜக சார்பில் தேசிய கருப்புதின ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி சென்னை நடேசன் பூங்காவில் பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர் அவர் பேசியதாவது: வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்றே பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்க நடவடிக்கை. மேலும் பொருளாதார வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் முயற்சி இந்த நடவடிக்கையால் ஏற்பட்டது.
வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு செயல்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. பழைய ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற இந்த அறிவிப்பு ஒரே நாளில் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
ரொக்கப் பயன்பாடு அதிகளவில் இருந்தது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக இருந்தது, ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளது.