நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி தன்னை பலர் மிரட்டியதாகவும், தான் மடாதிபதி ஆகக்கூடாது என்றே அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் சாமியார் தயானந்த் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரனஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியான பர்வதராஜ சிவச்சார்யாவின் மகனான தயானந்தா சுவாமி ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை கிளப்பியது.
அதைக்கண்ட பொதுமக்கள் சாமியாருக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், அது தான் இல்லை என தயானந்தா மறுப்பு தெரிவித்தார். அதோடு, அவர் தற்போது தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் வாட்ஸ்-அப் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள சாமியார் தயானந்த் “2014ம் ஆண்டு சிலர் என்னை சந்தித்து நான் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டினார்கள். அதை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டினார்கள். அதைத் தொடர்ந்து 2 பேருக்கு ரூ.45 லட்சம் பணம் கொடுத்தேன். அதன் பின் சூர்யா என்பவர் என்னை தொடர்பு கொண்டு அந்த வீடியோ தன்னிடம் இருப்பதாக் கூறி ரூ.20 லட்சம் கேட்டார். அவருக்கு ரூ.10 லட்சம் கொடுத்தேன்.
அதன்பின், மடத்தின் நிர்வாகியான மகேஷ் தன்னிடம் வீடியோ இருப்பதாக என்னை மிரட்டினார். இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், மகேஷ் என்னை காப்பாற்றினார். அவர்தான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும். நான் மடாதிபதியாக ஆகக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளனர். என்னுடம் பணம் கேட்டு மிரட்டிய அனைவரின் மீதும் போலீசாரிடம் புகார் அளிப்பேன்” எனக் கூறியுள்ளார்.