தமிழகத்தில் வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வெளியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பிக்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமித்ஷா, நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, அஜித் பவார், சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அப்போது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் சாசன புத்தகத்தை மோடி தொட்டு வணங்கினார்.
பிரதமர் மோடி தேர்வு:
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். மோடியின் பெயர் முன்மொழியப்பட்டபோது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆட்சி நடத்த பெரும்பான்மையை விட கருத்தொற்றுமையே முக்கியம் என்றார். என்டிஏ எம்பிக்கள் ஒவ்வொருவரும் என் கண்கள் போன்றவர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். NDA கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி என்றும் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் NDA கூட்டணி ஆட்சியில் இருக்கும் என்றும் நாட்டில் இருந்து ஏழ்மையை விரட்டுவது எங்கள் இலக்கு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அரசியல் சாசனப்படி அனைத்து மதங்களும் சமமானவை என்பதால் அனைவருக்கும் ஆட்சி நடத்துவதில் NDA உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை என்றும் தேசமே முதன்மையானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் வழியில் வந்தவர்கள் நாங்கள் என்றும் சிறப்பான கூட்டணி ஆட்சியை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். சிறந்த நிர்வாகத்திற்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரும் உதாரணமாக திகழ்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மீது விமர்சனம்:
நாங்கள் இதுவரை தோற்றதும் இல்லை, தோற்கப் போவதுமில்லை, தொடர்ந்து ஆட்சியில் இருப்போம் என்ற அவர், 10 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை என்று விமர்சித்தார்.
சிலர் வெளிநாடு சென்று இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று கூறுவதாக ராகுல் காந்தியை சாடிய அவர், குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர் கட்சியினர் எதற்காக கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் வரிசையில் அமரவே இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆண்டுக்கு ஒரு லட்சம் தருவோம் என்பன உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணியின் உத்திரவாதங்கள் தோற்றுவிட்டதாக விமர்சித்தார்.
பாஜக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
கேரளாவில் பெரிய மேஜிக் நடைபெற்று பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தேசத்தின் வளர்ச்சி இன்ஜினில் ஒடிசா மாநிலமும் இணைந்துள்ளது என்று தெரிவித்தார்.