சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்தியச் சிறையிலிருந்து தப்பியோடியதாக கூறப்படும்,‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிறையிலிருந்து தப்பிய சில மணிநேரத்திலேயே அவர்கள் 8 பேரையும், போபாலின் புறநகர் பகுதியிலுள்ள மல்லிகேடா பகுதியில் சுற்றிவளைத்து போலீசார் சுட்டு வீழ்த்தியதாக மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் கூறியுள்ளார்.
என்கவுண்ட்டருக்கு முன்னதாக, சரணடையுமாறு பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், போலீஸ் முற்றுகை வளையத்தை மீறி, அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதால், என்கவுண்ட்டர் நடத்தப்பட்டதாகவும் மாநில காவல் துறைத் தலைவர் யோகேஷ் சவுத்ரி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிமி தீவிரவாதிகள் மீது என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருக்கும் விதத்திலும் சந்தேகங்கள் இருப்பதாக காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இது குறித்து கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ”இஸ்லாமியர்கள் மட்டுமே சிறையை உடைத்துக் கொண்டு ‘தப்புவதாக’ கூறப்படுகிறது. ஏன் இந்துக்கள் சிறையிலிருந்து தப்புவதில்லை. இது பற்றி நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தேசிய புலனாய்வு முகமை மூலம் விசாரிக்க வேண்டும்” என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், “சிறையிலிருந்து தப்பியவர்கள் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், அவர்கள் சரணடையத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது; ஆயினும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே இதுபோன்று நடந்துள்ள சம்பவங்களின் அடிப்படையில் பார்த்தால், தன்னுடைய அரசியல் லாபத்துக்காக காவல்துறையைப் பயன்படுத்துவது பாஜக அரசுக்குப் புதிதல்ல” என்றும் அவர் காட்டமாக கூறியுள்ளார்.
‘தனக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி இது கண்டிப்பாக போலி என்கவுண்ட்டர்தான்’ என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ குற்றம்சாட்டியுள்ளார்.