மலிவான கட்டணம் என அறிவித்து ஒரே ஊசியை தொடர்ந்து பலருக்கும் செலுத்தி ஹெச்.ஐ.வி கிருமி தொற்றை ஒரு மருத்துவர் ஏற்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னோ மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு தொண்டு நிறுவனம் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. அப்போது, அந்த கிராமங்களில் வசிக்கும் 21 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி விசாரித்த போது, அந்த பகுதியில் மிகவும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்து வந்த ராஜேந்திர குமார் என்பவரிடம் அவர்கள் அனைவரும் சமீபத்தில் ஊசி போட்டுக் கொண்டது தெரிய வந்தது. விசாரணையில், ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்த ஒரு நோயாளிக்கு அவர் பயன்படுத்திய ஊசியை பலருக்கும் பயன்படுத்தியது தெரிய வந்தது.
அவரின் அலட்சியத்தால் குழந்தைகள் உட்பட 40 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உ.பி.யின் சுகாதாரத் துறை மருத்துவ கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.