உத்தர பிரதேசத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் டாக்டர்கள் கிரிக்கெட் விளையாடியதால் சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள தலியா நஹ்லா கிராமத்தை சேர்ந்தவர் நசீம். இவரது 5 வயது மகள் சோபியா கடந்த புதன்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனே சோபியாவை நசீம் பதாவுனில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. மருத்துவர்களை நசீம் தேடியபோது அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். தன்னுடைய மகளுக்கு மருத்துவம் பார்க்குமாறு அவர் டாக்டர்களிடம் கேட்டும் அவர்கள் அதற்கு மறுத்துள்ளனர். இதனால் சிறுமி சோபியா பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இதுகுறித்து சோபியாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் 2 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தர பணி நீக்கமும், 2 அரசு மருத்துவர்கள் ஒரு மாத கால பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K