சுங்க சாவடிகளில் பணம் செலுத்த பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பாஸ்டேக் அட்டை பெற்றிருப்பது அவசியமாகும். ஒவ்வொரு முறையும் பாஸ்டேக் அட்டை மூலமே பணம் செலுத்த வேண்டும்.
பாஸ்டேக் அட்டை பெறுவதற்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கபட்டிருந்தது. நாளை முதல் பாஸ்டேக் அட்டை இல்லாமல் சுங்க சாவடிகளில் பயணிப்பவர்களுக்கு இருமடங்கு கட்டணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பாஸ்டேக் வாங்காதவர்கள் டிசம்பர் 15க்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 70 லட்சம் வாகனங்கள் பாஸ்டேக் அட்டை பெற்றுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.