சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசிக்க மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிக அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர் என்பதும் இதனால் மணி கணக்கில் நாள் கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நிறைவடைவதை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
தற்போது 15 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் ஜோதி தரிசனம் செய்யவும் இந்த வாரம் மிக அதிகமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.