நடைபெறும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலமாக பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2 தேர்தல்களிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மூன்றாவது முறையும் வாரணாசி தொகுதியிலேயே களம் காண்கிறார். இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக புனித நதியான கங்கையில் பிரதமர் மோடி நீராடி பிரார்த்தனை செய்தார்.
சிறப்பு பூஜைக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி “கங்கை நதி என்னை தத்தெடுத்துக் கொண்டுள்ளது. எனது தாயின் மறைவுக்கு பின் அவருடனான நெருக்கத்தை கங்கை நதியிடம் உணர்கிறேன். கங்கை நதி தாயை போல அனைவரையும் காக்கிறது. 140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுளின் ஆணை” என கூறியுள்ளார். தன் தாய் குறித்து பேசியபோது அவர் கண்கலங்கினார்.
இதற்கு முன்னர் கங்கையின் புத்திரனாக மகாபாரதத்தில் தோன்றிய பீஷ்மர் பாரதத்தின் விஸ்வகுருவாக விளங்கினார். அவரை போலவே பிரம்மச்சாரியாக இருக்கும் பிரதமர் மோடி இன்று கங்கை நதியை தனது தாயாக பாவித்து கங்காபுத்திரனாகவே (பீஷ்மராக) தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள நிலையில் இது தேர்தலில் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.