பாகிஸ்தான் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது மிகப்பெரிய தவறு என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறப்பட்டு பிடிபட்ட குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரித்து ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும்வரை, எந்தவித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவால் குல்பூஷன் உறவினர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கட்ஜூ இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் இனி எழுப்பும் என்றும் இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அதிக எதிர்ப்பு தெரிவிக்காததற்கு இதுவே உண்மையான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.,