பாகிஸ்தானில் உள்ள பிரபல சீக்கிய குருத்வாரை இடிப்பதாக இஸ்லாமிய அமைப்பு ஒன்று பேசியுள்ளதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது சீக்கியர்களின் புனித தலமான நானா சாஹிப் குருத்வார் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது. முகமது ஹசன் என்ற பாகிஸ்தான் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபர் சில கும்பல்களோடு சேர்ந்து நேற்று குருத்வாரை தாக்கியுள்ளார். சீக்கியர்களுக்கு எதிரான வாசகங்களை ஏந்தி வந்த அந்த கும்பல் குருத்வாரை இடித்து விட்டு அங்கு மசூதி கட்டப்போவதாக சூளுரைத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வீடியோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ”கடவுள் ஒருவரே.. அவரது பெயரால் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தாதீர்கள். முதலில் மற்றவர்களை மதிக்கும் நல்ல மனிதராக இருங்கள். முகமது ஹசன் சீக்கியர்களின் குருத்வாராவை இடிப்பதாக வெளிப்படையாக சொல்கிறார். பிரதமர் இம்ரான்கான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.