வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கழிவறைக்கும் 25 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று இமாச்சல பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், நகர்புறங்களில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த கழிவறை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் ஒவ்வொரு மாதமும் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் பொதுமக்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன், கழிப்பறை வரியும் சேர்க்கப்படும் என்றும், இந்த தொகை ஜல் சக்தி துறைக்கு அனுப்பப்படும் என்றும் இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
கழிவறை கட்டுவது அவசியம் என்று ஒரு பக்கம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் கழிவறைக்கு வரி விதித்தது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.