ஆண்டு வருமானம் வெறும் இரண்டு ரூபாய் என தாசில்தார் வழங்கிய வருமானச் சான்றிதழ் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் திசு பல்ராம் என்பவர் வருமானச் சான்றிதழ் கேட்ட நிலையில், அவருக்கு ஆண்டுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே வருமானம் என்று கடந்த ஜனவரி மாதம் தாசில்தார் சான்றிதழ் வழங்கியுள்ளார். சான்றிதழ் வழங்கப்பட்டவரின் குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதுடன், அனைவரும் கூலித்தொழில் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழின் அடிப்படையில் திசு பல்ராமின் மகன் படிப்பை தொடர்வதற்காக உதவி தொகைக்கு விண்ணப்பித்த நிலையில், ஆண்டு வருமானம் வெறும் இரண்டு ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உதவி தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து திசு பல்ராம் கூறியபோது, "ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுகிறேன். நான் சான்றிதழுக்கு பொதுச் சேவை மையம் மூலம் விண்ணப்பித்தேன், ஆனால் அதில் ஆண்டுக்கு இரண்டு ரூபாய் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாங்கள் கவனிக்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தவறாக வருமான சான்றிதழ் அச்சடிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.