கனடா – இந்தியா இடையே விசா சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியாவிலிருந்து சென்று கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சமீபத்தில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு பின்னால் இந்திய தூதரக அதிகாரி உள்ளதாக சந்தேகித்த கனடா அரசு அவரை கனடாவிலிருந்து வெளியேற்றியது.
இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய அரசு இந்தியாவில் உள்ள கனட தூதரை வெளியேற்றியதுடன், கனடா – இந்தியா இடையேயான விசா சேவையையும் தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால் கனடா – இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
செப்டம்பரில் நிறுத்தப்பட்ட இந்த விசா சேவையை தற்போது மீண்டும் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இரு நாட்டுக்கு இடையே ஏற்பட்ட உறவுநிலை விரிசல் மெல்ல சுமூகமான நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.