டெல்லியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்ததால், 3 பேர் கொண்ட கும்பல், ஒரு முஸ்லீம் மத போதகரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டில் அங்கங்கு சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்ததால், ஒரு முஸ்லீம் மத போதகரை, 3 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் திருக்குரான் பயிற்சி அளிக்கும் மதபோதகரான மவுலானா மொமின், நேற்று மாலை ரோஹினி செக்டாரில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு காரில் 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.
பின்பு மவுலானாவை ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுமாறு மிரட்டியுள்ளனர். மவுலானா ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்ததால், அவரை 3 பேரும் மிக கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலால் மயக்கமடைந்த மவுலானாவை பொது மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மவுலானாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர் மவுலானாவின் குடும்பத்தினர்.
பின்பு அப்புகாரின் அடிப்படையில் ரோஹினி செக்டாரில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மவுலானாவைத் தாக்கிய 3 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் சிறுபான்மையினரின் மீது தாக்குதல் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது டெல்லியில் நடந்த தாக்குதல் சம்பவம் சிறுபான்மையினரிடம் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.