கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பியோடியதும், சுகாதார ஊழியர்கள் அவரை துரத்தி பிடித்ததுமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஆசாமி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி நின்றுள்ளார். மேலும் அவர் மாஸ்க் அணியாமலும் இருந்ததால் அவரை காவலர்கள் விசாரித்துள்ளனர். அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் துபாயிலிருந்து வந்ததும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதை மதியாமல் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அவரை ஆம்புலஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது அவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓட தொடங்கியுள்ளார் குடிபோதை ஆசாமி. கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் உள்ள ஊழியர்கள் அவரை துரத்தி சென்று பிடித்து அவர் கை, கால்களை ஸ்ட்ரெச்சரோடு சேர்த்து கட்டி அழைத்து சென்றுள்ளனர். அவர்மீது தொற்றுநோய் பரப்பிய குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் துரத்தி சென்று பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.