கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய மாஃபியா கும்பல் தலைவன் சிறைச்சாலை வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவன் முன்னா பஜ்ரங்கி. இவன் மீது ஏகப்பட்ட குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. இவன் மாபியா கும்பலின் தலைவன் ஆவான்.
இந்நிலையில் முன்னா பஜ்ரங்கியை கைது செய்து சிறையிலடைத்த போலீஸார், அவனை ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஜான்சி சிறைச்சாலையில் இருந்து பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அவனை சிறைச்சாலை வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு ரவுடியான சுனில் ரதி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முன்னாவை நோக்கி சுட்டுள்ளான். இதில் முன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கைதியிடம் எப்படி துப்பாக்கி வந்தது என போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸாரே தன் கணவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ள திட்டமிட்டுள்ளதாக முன்னாவின் மனைவி கூறி வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.