பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என பிரஜ்வல் ரேவண்ணா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்தது. அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மதச்சார்பற்ற ஜனதா தள முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக தாம் கைது செய்யப்படலாம் என கருதி, ஏப்ரல் 26-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். அப்போது அவர் கையோடு தனது செல்போனை எடுத்துச் சென்றார்.
அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில், நேரில் சரணடைவதாக பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு இருந்தார். அதன்படி வெளிநாட்டில் இருந்து இன்று அதிகாலை பெங்களூர் வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தான் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என பிரஜ்வல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.