டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குறித்த ஊழல் வழக்கில் அவரது வங்கி லாக்கர் சோதனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களாக சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. அதேசமயம் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த கெஜ்ரிவாலின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகளை ஏவி விடுவதாக மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள மணிஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் திறந்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. வங்கியில் மனிஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி முன்னிலையில் லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய மணிஷ் சிசோடியா “சிபிஐ அதிகாரிகள் யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் செயல்படுகிறார்கள். இன்றைய சோதனைக்கு பின்னர் நான் குற்றமற்றவன் என்பதை சிபிஐ கூறியிருக்கிறது. அவர்கள் எனது வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ குற்றச்சாட்டு தொடர்பான எதையும் கண்டுபிடிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.