இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி கடந்த சில மாதங்களாக சென்றுகொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நடந்து சென்றதால் வழியில் சில மரணங்கள் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல பணிகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனை அடுத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை விமான டிக்கெட், முன்பணம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊரில் இருந்து வெளி மாநிலத்துக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பல நிறுவனங்கள் பீகார் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் 5000 முன்பணம் அனுப்பி, விமான டிக்கெட்டையும் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் சென்னையைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகள் புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் மீண்டும் புலம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசு தங்கள் சொந்த மாநிலம் மக்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் இங்கேயே அவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது