மது வாங்க வந்தவரை மலர்தூவி வரவேற்ற கடைக்காரர்!
கொரோனா வைரஸ் பணியில் இருக்கும் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. நேற்று கூட பல மருத்துவமனைகளில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் மூன்றாவது கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில தளர்வுகள் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒன்று நாடு முழுவதும் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்பதுதான். சமூக இடைவெளியை பின்பற்றி மது வாங்கி வீட்டிற்கு சென்று குடிக்கலாம் என்றும் மதுக்கடைகள் திறந்தாலும் பார்கள் திறக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள மிர்சாபூர் என்ற பகுதியில் இன்று இரண்டு மாத காலத்திற்கு பின்னர் மதுக் கடைகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து வரிசையில் நின்ற வாடிக்கையாளர்களுக்கு அந்த கடையின் உரிமையாளர் மலர்தூவி வரவேற்றார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மது வாங்க வருபவர்களுக்கு எல்லாம் மலர் தூவி வரவேற்பு செய்வது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது