தொழிலதிபர் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.526 கோடிக்கு வாங்கப்பட்ட போர் விமானம் தற்போது 1,600 கோடிக்கு வாங்கப்படுகிறது. இந்த துறையில் சிறிதும் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தில் பங்கு அளிக்கப்பட்டதில் இருந்து மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிகிறது.
மோடி இந்திய மக்களுக்கு பிரதமராக பணியாற்றாமல் தொழிலதிபர்களுக்கு பிரதமராக பணியாற்றுகிறார். அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக உள்ளார். இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய ஊழலில் மோடியும் கூட்டாளி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.