இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் பெயரிலுள்ள செயலியின் மூலம் நன்கொடை அனுப்புமாறு மக்களிடம் கேட்டுள்ளார்.
நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் முடியவுள்ளதை அடுத்து வரும் மே மாதம் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, கருப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் வீழ்ச்சி என பல எதிர்மறையான நிகழ்வுகள் நடந்துள்ளன.
மேலும் சென்ற தேர்தலின் போது இந்தியாவில் உள்ள கருப்புப் பணத்தையெல்லாம் வெளிக்கொண்டு வந்து ஒவ்வோரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என அறிவித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்து சமுக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தற்போது வரப்போகும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவுகளுக்காக பாஜக அரசு மக்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது பெயரிலுள்ள செயலியின் வழியே மக்கள் தங்களால் முடிந்த நன்கொடையை 5ரூ முதல் 5000ரூ அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளார்.