மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சி அடுத்தகட்ட நடவடிக்கையாக 12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில கவர்னர்களின் பதவிக்காலம் வரும் ஜூலையுடனும், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களின் கவர்னர்களின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடனும், கேரள மாநில கவர்னரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடனும் முடிவடைகிறது. எனவே இந்த 9 மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமனம் செய்ய மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது
அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக மத்தியபிரதேச மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுனராக நரசிம்மன் இருந்து வருகிறார். எனவே சத்தீஷ்கர் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு தனி கவர்னர் ஒருவரை நியமனம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மிசோராம் மாநிலத்தின் கவர்னராக இருந்த ராஜசேகரன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் அம்மாநில ஆளுனர் பதவியும் காலியாக உள்ளது
இந்த நிலையில் புதியதாக நியமனம் செய்யப்படவிருக்கும் 12 கவர்னர்களில் பாஜகவின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக சுஷ்மா ஸ்வராஜ், பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது