நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்த நிலை உருவாகியிருப்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசை பல எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்து மாதம் 23 ஆம் தேதி, பொருளாதார மந்த நிலையை சமாளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சலுகைகளை அவர் அறிவித்தார்.
மேலும் வீட்டுகடன், வாகன கடன் வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் கடந்த ஆகஸ்து 30 ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாரமன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அரசு நடவடிக்கையாக 10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை மத்திய நிதியமைச்சர் சீதாரமான் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் சரிவு குறித்து கேள்வி எழுப்பிய போது, ஓலா. ஊபர் போன்ற வாகனங்களை மக்கள் பயன்படுத்த தொடங்கியதனால் தான் யாரும் கார் வாங்குவதில்லை என கூறியது பெரும் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.