மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்: பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வர்!
மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்: பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வர்!
பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார். இன்று பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் நேற்று திடீரென பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
லாலுபிரசாத் யாதவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி மீது ஊழல் புகார் வந்து சிபியை சேதனை நடந்ததையடுத்து பதவி விலக வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்த அதற்கு லாலுபிரசாத் சம்மதிக்காததால் தனது பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 58 உறுப்பினர்களை கொண்டுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 71 உறுப்பினர்களும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 80 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில் ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்கள் பலம் போதும் என்ற நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பாஜக பச்சைக்கொடி காட்டியது. இதன் மூலம் நிதிஷ்குமார் கட்சியின் 71 உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் 58 உறுப்பினர்கள் என மொத்தம் 129 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
இதனையடுத்து இன்று பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மீண்டும் நிதிஷ்குமாருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் அம்மாநில பாஜக தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அமைச்சரவையிலும் பாஜகவுக்கு இடம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களில் பெரும்பாண்மையை நிரூபிக்க ஆளுநர் நிதிஷ்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.