வடகிழக்கு பருவ மழை தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவமழைகள் இருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, நான்காவது வாரத்தில் மழை அதிகரிக்கும் என்றும், மூன்று மாதங்கள் இந்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.