குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவரும் வேளையில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சேர்ந்து வெங்காய விலை ஏற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயாலும் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பிறகு பல முறை அவர் ஜாமீன் மனு தாக்கல் செயதார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதனிடையே சமீபத்தில் சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற மனுத் தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம். இதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 106 நாட்கள் சிறைவாசத்திலிருந்து தற்போது விடுதலையானார் ப.சிதம்பரம்.
இந்நிலையில் நாட்டில் வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. மேலும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெங்காய விலை ஏற்றத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இவர்களுடன் நேற்று விடுதலையான ப.சிதம்பரமும் கலந்துக் கொண்டார்.