ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக புதன்கிழமை கூறிய மத்திய அரசு பின்னர், வெள்ளிக்கிழமை அந்த ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் ஆவணங்கள் மட்டுமே திருடப்பட்டதாக கூறியுள்ளது குறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் நக்கல் அடித்துள்ளார்.
புதன்கிழமை திருடப்பட்டதாக கூறிவிட்டு வெள்ளிக்கிழமை திருடப்பட்டது ஜெராக்ஸ் காப்பிதான் என்று கூறியிருப்பதன் மூலம் வியாழக்கிழமை திருடிய திருடன் மீண்டும் திருப்பி தந்துவிட்டானோ என்று எண்ண தோன்றுகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்படவில்லை என்றும், நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்கள் அசல் ஆவணங்களின் போட்டோ காப்பிகளையே பயன்படுத்தியதாகவும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.