இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பம் மற்றும் வெப்ப அலைகளின் தாக்கம், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தியாவில் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஆங்காங்கே சில நகரங்களில் இப்போதே மே மாத அளவிற்கு கடும் வெப்பம் நிலவத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றம், எல் நினோ போன்றவற்றால் இந்த ஆண்டு இந்தியாவில் கோடைக்கால வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கோடைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பஞ்சம் ஏற்படாத வகையில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் அளித்தல், உணவு தானிய கையிருப்பு, அவசரநிலையை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பிரதமர் மோடி சில அறிவுறைகளை வழங்கி அவற்றை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தினம்தோறும் வானிலை அறிக்கைகளை மக்களுக்கு புரியும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தயாரித்து வழங்க வேண்டும்.
டிவி செய்தி சேனல்கள், வானொலிகளில் இதற்கென நேரம் ஒதுக்கி வானிலை குறித்த சரியான தகவல்களை வழங்கி மக்கள் தயார்படுத்திக் கொள்ள செய்ய வேண்டும்.
வெயில் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்ற வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும்.
அதீத வெப்பத்தால் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைக்க தயாரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் வழங்கியுள்ளார்.
Edit by Prasanth.K