புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி, அம்மாநில கவர்னர் கிரண்பேடியின் போக்கினை கண்டித்து இன்று தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ஒரு முதல்வர், ஆளுனர் மாளிகையின் முன் தர்ணா போராட்டம் நடத்துவதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து கவர்னர் கிரண்பேடியின் கோரிக்கையை ஏற்று நாளை மத்திய படையினர் புதுவைக்கு வரவுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கும் மேல் தர்ணா போராட்டம் நடைபெற்று வருவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதல்வர் நாராயணசாமியுடன் புதுவை மாநில தலைமைச் செயலர் அஸ்வினி குமார், டிஜிபி சுந்தரிநந்தா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் இன்னும் சில நிமிடங்களில் தர்ணா முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இன்று இரவு விடிய விடிய முதல்வர் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும், தங்களுடைய கோரிக்கை தொடர்பாக 6-ம் தேதி கடிதம் கொடுத்துள்ளதாகவும், ஆளுநர் கிரண்பேடி அனுப்பி உள்ள கடிதத்தை ஏற்றுகொள்ள முடியாது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.