மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.90 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த வருமான வரித்துறை சோதனையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் 30 மணி நேரம் சோதனை நடந்ததாகவும், இந்த சோதனையில் நீண்ட நேரத்திற்கு பின் பர்னிச்சர் பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த பணத்தின் மதிப்பு ரூ.26 கோடி என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தொழிலதிபரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை 7 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலதிபருக்கு சம்mமன் அனுப்பி விசாரணை செய்யப்படும் என்றும் விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறதா? வருமான வரி செலுத்தப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.