நாடெங்கும் ஒருபக்கம் வறட்சியிலும், வெயிலிலும் கனன்று கொண்டிருக்க, மற்றோரு புறம் புயலும், மழையும் சோதித்து வருகின்றன. ஆனால் உத்தர பிரதேசத்தின் நிலைமை வேறு. ஏற்கனவே மழை இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு மேற்கொண்டு வேதனையை கொடுத்து வருகிறது புழுதி புயல்.
உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் அனலையும், மண்ணையும் கக்கும் புழுதி புயல் பல இடங்களில் வீசி வருகிறது. முக்கியமாக சித்தார்த்தா நகர் பகுதியில் வீசிய புயலில் சிக்கி 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல கால்நடைகள் உயிரிழந்ததோடு 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன. இது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த புழுதி புயல் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணமாக குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.