கேரளாவில் தந்து குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த ஜாலி, தான் வளர்த்த செல்ல நாய்க்கு சைனைடு கொடுத்து கொலை செய்ய ஒத்திகை பார்த்தார் என கூறப்படுகிறது.
கேரளா மாநிலம், கூடத்தாயி கிராமத்தை சேர்ந்த ஜாலி என்ற பெண், ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது மண வாழ்க்கை மிகவும் கசப்பாக சென்றுள்ளது. இதனிடையே ஜாலி, தனது மாமனாரின் அண்ணன் மகன் சாஜுவிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர். தனது கணவரின் குடும்பத்தினர் இதற்கு முட்டுக் கட்டையாக இருப்பர் என நினைத்த ஜாலி, அனைவரையும் தீர்த்துகட்ட முடிவெடுத்தார்.
ஜாலியின் கணவர் ராய் தாமஸின் குடும்பத்தில் உள்ளவர்கள், இரவு உணவிற்கு பிறகு, மட்டன் சூப் சாப்பிடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி சூப்பில் சையனைடு கலந்து அனைவரையும் கொலை செய்ய முடிவு எடுத்தார். ஆனால் அனைவரையும் உடனடியாக கொலை செய்யவில்லை. தன் மீது சந்தேகம் வரும் என்பதால் சிறிது காலம் இடைவெளி விட்டுவிட்டு தனது திட்டத்தை நிறைவேற்றினார்.
அதன் படி, 2002 ஆம் ஆண்டு, தனது மாமியார் அன்னமாவுக்கு மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொடுத்து கொன்றார். பின்பு 2008 ஆம் ஆண்டு மாமனார் தாமஸ், 2011 ஆண்டு கணவர் ராய் தாமஸ் ஆகியோரையும் அதே போல் மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொன்றார். இது போல் தான் திட்டமிட்டபடி கொலைகள் செய்துகொண்டிருந்தபோது அன்னமாவின் சகோதரர் மேத்யூ, ஜாலியின் மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனை அறிந்த ஜாலி, 2014 ஆம் ஆண்டு மேத்யூவையும் மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொன்றார்.
இதோடு நின்றுவிடவில்லை அவர். 2016 ஆம் ஆண்டு, தனது காதலரான சாஜூவின் மனைவி சிலியையும் அவரது 10 மாத பெண் குழந்தையையும் மட்டன் சூப்பில் விஷம் கலந்து கொன்றார். அதன் பின் 2016 ஆம் ஆண்டு சாஜுவும் ஜாலியும் திருமணம் செய்துகொண்டனர்.
இதனையடுத்து வெளிநாட்டில் வசித்து வரும் ராய் தாமஸின் சகோதரர், தனது குரும்பத்தினர் உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் புகார் அளித்தார். அதன் பின்பு, சாஜூவின் மனைவி சிலியின் உறவினர்களும் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போலீஸார் உயிரிழந்த உடல்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை மூலம், அனைவரும் சையனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக ஜாலியையும் சாஜூவையும் விசாரித்த போது, ஜாலி உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து ஜாலியின் இந்த கொலைகளுக்கு உதவியதாக மேத்யூ, பிரஜிகுமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மனோஜ்குமார் ஆகியோர் கைது செய்ய்ப்பட்டனர். போலீஸார் தற்போது இந்த கொலைகளை செய்த விதம் குறித்தும் நேரம் குறித்தும் ஜாலியை தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது ஜாலி தான் வளர்த்து வந்த செல்ல நாய்க்கு சைனைடு வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜாலியிடம் கேட்டபோது நாய்க்கு வெறி பிடித்தால் தான் வேறு வழியின்றி சையனைடு வைத்து கொன்றேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புதைக்கப்பட்ட நாயினை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய காவல்துறை முடிவெடுத்துள்ளது.