பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து ஷமிகா ரவி பதிவு செய்த ஒரே ஒரு டுவீட்டை அடுத்து அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஷமிகா ரவி இடம்பெற்றிருந்த நிலையில் அவர் தனது டுவிட்டரில் பொருளாதார மந்த நிலை குறித்தும், மத்திய அரசின் சில முடிவுகள் குறித்தும் ஒருசில கருத்துக்களை தெரிவித்திருந்தார். நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரிசெய்ய அனைத்து துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து தேசிய அளவில் வளர்ச்சி திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் சமீபத்தில் இசிகரெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறித்தும் அவர் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஒரு டுவிட்டில் அதிக வரி விதிக்கப்படும் இசிகரெட்டை தடை செய்தது ஏன்? மற்ற புகையிலை பொருட்களுக்கு அனுமதி இருக்கும் போது இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை விதிப்பது வினோதமானது என்றும் இந்த முடிவை சுகாதாரத்துறை அல்லது நிதித்துறை இந்த இரண்டு துறையினர் எந்த அடிப்படையில் எடுத்தனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய குழுவில் ஷமிகா ரவி இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சஜ்ஜித் சினாய் என்பவர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது