ஹரியானாவில் இறைச்சி கொண்டு சென்ற இஸ்லாமியரை சிலர் அது மாட்டிறைச்சி என நினைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் பலர் தங்கள் வீடுகளிலேயே பக்ரீத் விழாவை கொண்டாடினர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்ரீத் அன்று மாடு மற்றும் ஒட்டகம் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானாவின் கொரேகான் பகுதியில் இஸ்லாமியரான லக்மன் கான் என்பவர் இறைச்சி கொண்டு சென்றிருக்கிறார்.
அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவர் மாட்டுக்கறி கொண்டு செல்வதாக எண்ணி கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அது மாட்டிறைச்சி அல்ல என அவர் விளக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால் எதிர் கும்பல் அவரை ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கைகள் முறிந்த நிலையில் லக்மன் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கொரேகான் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.