தனிஷ்க் நகை கடை வெளியிட்ட விளம்பரம் மத ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் குஜராத்தில் தனிஷ்க் நகைக்கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக்கடைகள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் தனிஷ்க் நிர்வாகம் விளம்பர படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இஸ்லாமிய மாமியார் ஒருவர் தன் இந்து மருமகளுக்கு நகைகள் வாங்கி வளைகாப்பு நடத்துவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மதம் மாறி காதல் திருமணம் செய்வதை இது ஊக்குவிப்பதாக இருப்பதாக கூறி இந்த விளம்பரத்தின் மீது புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து தனிஷ்க் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்டானதால் அந்த விளம்பரம் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள தனிஷ்க் நகை கடையை மர்ம கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதமாற்ற திருமணத்தை ஆதரித்து விளம்பரம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.