மே 12-ந் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், காவிரி வழக்கை மே 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது.
கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டும், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கானது கடந்த ஏப்ரல் 9 ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 3 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய முடியவில்லை என மத்திய அரசு பதிலளித்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை மே 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கு 4 எம்.டி.சி நீரை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணிரை தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12 -ஆம் தேதி நடைபெற உள்ளதால் காவிரி வழக்கை ஒத்தி வைக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் காவிரி வழக்கை மே-14 தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.