உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு உலகெங்கிலும் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த ஒரே ஒரு நினைவு சின்னத்தால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.
இந்த நிலையில் இன்று உ.பி அரசு பிறப்பித்த ஒரு உத்தரவில் தாஜ்மஹாலை சுற்றுலாப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. உபியின் பாஜக அரசுக்கு அனைத்து தேசிய கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தொல்திருமாவளவன் இதுகுறித்து கடுமையான கண்டனத்துடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருமாவளவன் தனது அறிக்கையில், 'முஸ்லிம் அரசர் ஒருவரால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவே தாஜ்மகாலை உத்தரப்பிரதேச அரசு நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை தாஜ்மகாலின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு தாஜ்மகாலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.