போதை தலைக்கு ஏறிய ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு விடுமுறை விட்டதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும் அவர் நிதானம் இன்றி வகுப்பறையில் இருந்த நிலையில் திடீரென அவர் விடுமுறை அறிவித்து அனைத்து மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் உடனடியாக இதில் காவல்துறை தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ததாகவும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில் அந்த ஆசிரியரின் பெயர் ரவிசங்கர் பாரதி என்றும் சம்பவத்தன்று அவர் பள்ளியில் மது அருந்தி விட்டு வந்ததாகவும் மாணவர்கள் அனைவரிடமும் குடிபோதையில் இன்று பள்ளி விடுமுறை எல்லோரும் வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் ரவிசங்கர் பாரதி குடி போதையில் இருப்பதை பார்த்து சக ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் குடிபோதையில் இருந்த அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நீதிபதி அவருக்கு அபராதம் விதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய உயர் அதிகாரிகளுக்கு கல்வி அலுவலர் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.