தெலுங்கானாவில் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக வேறு ஒருவரை கொன்று தான் இறந்ததாக ஜோடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் தர்மநாயக். இவர் தெலுங்கானா மாநில செயலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி இவரது கார் வெங்கடாபுரம் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து கிடந்த நிலையில், உள்ளே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
அந்த உடலை கண்ட தர்மநாயக்கின் மனைவி அது தனது கணவர்தான் என அடையாளம் சொன்ன நிலையில் அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. எனினும் கார் பெரிதாக எரியாத நிலையில் சடலம் மட்டும் மோசமாக எரிந்து கிடந்த சம்பவம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் தர்மநாயக் மனைவியின் செயல்பாடுகளை கண்காணித்தபோது தர்மநாயக் பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை பெற அவர் அவசரமாக விண்ணப்பித்து வந்தார். விசாரித்து பார்த்ததில் கடந்த ஒரு ஆண்டுக்குள் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் மொத்தமாக ரூ.7.4 கோடி மதிப்புடைய இன்சூரன்ஸை தர்மநாயக் எடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரது மனைவியை பிடித்து விசாரித்ததில் தர்மநாயக் சாகவே இல்லை என்பதும், இன்சூரன்ஸ் பணத்தை பெற இருவரும் சேர்ந்து இவ்வாறு திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து தர்மநாயக்கை போலீஸார் பிடித்து விசாரித்ததில் டிரைவர் ஒருவரை கொன்று எரித்து காரில் போட்டதாகவும், பங்குசந்தை முதலீட்டில் ரூ.80 லட்சம் வரை இழந்த நிலையில் இன்சூரன்ஸ் பணத்தை பெற இந்த திட்டத்தை தீட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.