ஐதராபாத்தில் நள்ளிரவில் பெண் ஒருவரை சந்திக்க சென்ற தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் பகுதியில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான தொழிலதிபர் ராமு. இவர் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் பாஜக கட்சியிலும் இணைந்துள்ளார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள யூசுப்குடா பகுதிக்கு சென்ற அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். அவருடைய அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் காணப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில் அவர் கொல்லப்பட்ட அன்று நள்ளிரவில் ஒரு பெண் அவரை போனில் அழைத்து யூசுப்குடாவில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தது தெரிய வந்துள்ளது. செல்போன் எண்ணை கொண்டு போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அந்த பெண்ணும், அவருடன் 8 பேர் கொண்ட கும்பலும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொழிலதிபர் ராமுவின் முன்னாள் நண்பரான மணிகண்டன் என்பவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர். சமீபத்தில் ராமு, மணிகண்டன் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.