திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 42 வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி வெளியிட்டு ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி, இந்த முறை பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
ஆனாலும் INDIA கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கனவே மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்புர் தொகுதியிலும், கிர்த்தி ஆசாத் பர்தமான்-துர்காபுர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேலும் கிருஷ்ணாநகர் தொகுதி வேட்பாளராக மஹூவா மொய்த்ரா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியலில் பல புதிய முகங்கள் உள்பட 16 சிட்டிங் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.