ராஜஸ்தானில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறையில் காவலர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பல சிவன் கோவில்களிலும் மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து விரதமிருந்து சிவனை வழிபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியில் உள்ள லுதுனா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. அப்போது இருதரப்பினரிடையே எழுத்த வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதனால் அங்கு இரு குழுவினர் இடையே கலவரம் வெடித்ததால் பரபரப்பு எழுந்தது.
அப்போது அங்கு பணியிலிருந்து நிரஞ்சன் சிங் என்ற காவலர் மோதலில் ஈடுபட்டவர்களை தடுப்பதற்கு முயன்றுள்ளார். அப்போது கூட்டத்தில் யாரோ நிரஞ்சன் சிங்கின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த நிரஞ்சன் சிங்கை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் நிரஞ்சன் சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் லுதுனா கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நிரஞ்சன் சிங்கை கத்தியால் குத்தியது யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.