ஹரியானா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. எனினும், கூட்டணியில் அங்கம் வகித்த ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதலமைச்சராக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில், இந்த மோதல் முற்றியது.
இதனிடையே அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பதவி விலகினார். அவரது அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனால், அமைச்சரவை கலைக்கப்பட்டது.
இதை அடுத்து ஹரியானாவின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த நயாப் சிங் சைனி நேற்று பதவியேற்று கொண்டார். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஹரியானாவில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததால் ஹரியானா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.