குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அம்பத்துரை சேர்ந்த, 27 வயது வாலிபர், மொபைல் போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார். அவர் மீது, தகவல் தொழில்நுட்பம், போக்சோ சட்டப் பிரிவுகளில், அம்பத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல என்றும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது தான் குற்றம் என்றும் தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி. பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான் என்று தீர்ப்பளித்தது
குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும் என்றும் இது கொடுமையானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.